ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்


ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் 2 மாதங்களுக்கு மேலாக தேங்கி கிடக்கும் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து தென்காசி செல்லும் பிரதான சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூத்தில் உள்ளது அய்யனார்குளம். விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சுமார் 200 ஏக்கருக்கும் மேல் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. அம்பை-தென்காசி சாலையில் இருந்து இந்த ஊருக்கு செல்லும் வழியில் ெரயில்வே தண்டவாளம் உள்ளது. ஆளில்லாத இந்த தண்டவாளத்தை கடந்து தான் மக்கள் செல்ல வேண்டும்.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அந்த தண்டவாளத்திற்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவ்வப்போது பெய்த மழை, வயல்கள், கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீர் சுரங்கப்பாதையில் தேங்கியது. இதனால் கிராம மக்கள் அந்த வழியாக செல்ல அவதிப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் அறை அமைத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் அந்த மின்மோட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் கடந்த 2 மாதத்திற்கும் மேல் சுரங்கப் பாதையில் சுமார் 14 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்கின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தண்ணீர் இருப்பது தெரியாமல் அதில் சிக்கும் நிலையும் உள்ளது. மேலும் அவசர ேதவைக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆளில்லாத ரெயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கிறார்கள். எனவே இந்த சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றிவிட்டு, தண்டவாள பகுதியில் ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story