பள்ளிஅருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
பள்ளிஅருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சுற்றியும் குடிநீர், தார்சாலை, மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகள் இன்றி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லக்கூடிய சாலை பிரதான சாலையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல நாட்களாக சாலை பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில் சாலையை மேம்படுத்திய மாநகராட்சி நிர்வாகம் சாலையோரம் சாக்கடை கால்வாய் வசதியை மேம்படுத்தாமல் உள்ளனர். இதனால் சாலையோரம் பல்வேறு இடங்களில் சாக்கடையில் கழிவுகள் தேக்கம் அடைவதோடு, துர்நாற்றமும் வீசி வருகிறது. பலவஞ்சிபாளையம், வீரபாண்டி போலீஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வேலவன் பள்ளி அருகில் சாக்கடைக்கழிவுகள் பல நாட்களாக தேக்கமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், தொழிலாளர் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். சாக்கடை கழிவுகள் அப்பகுதியில் தேக்கம் அடையாதவாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.