தூத்துக்குடியில் தபால் தலை கண்காட்சி
தூத்துக்குடியில் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.
இந்திய தபால் துறை சார்பில் தேசிய தபால் வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தபால் தலை சேகரிப்பு குறித்த கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா, காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் கர்னல் சுந்தரம், ராமநாதன் ஆகியோரின் தபால் தலை சேகரிப்புகள் இடம்பெற்று இருந்தன. கண்காட்சியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தபால் தலை குறித்த வினாடி வினா போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 11 பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை அமிர்தா வித்தியாலயம் பள்ளியும், 2-வது இடத்தைஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியும், 3-வது இடத்தைதூத்துக்குடி ஜின்பாக்டர் ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் குமரன், வசந்தா சிந்து தேவி, தபால் ஆய்வாளர் ஆ. சுப்பையா, வணிக நிர்வாக அலுவலர் பொ.பொன்ராம்குமார், காமராஜ் கல்லூரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.