ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி விலை சரிவை தடுக்க வேண்டும்; தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு
ஸ்டார்ச் மாவு மற்றும் ஜவ்வரிசி விலை சரிவை தடுக்க வேண்டும் என்று தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது
ஸ்டார்ச் மாவு மற்றும் ஜவ்வரிசி விலை சரிவை தடுக்க வேண்டும் என்று தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
மரவள்ளி கிழங்கு
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு, தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்து உள்ளதாவது:-
தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த மாவட்ட விவசாயிகளின் அடிப்படை ஆதாரமாகவும் மரவள்ளி பயிர் உள்ளது. இதன் அறுவடை காலம் நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் வரை ஆகும்.
பிற்காலங்களில் சூழ்நிலைக்கேற்ப அறுவடை செய்வார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் வரை ஒரு டன் மரவள்ளி கிழக்கு ரூ.14 ஆயிரம் வரை அரவை மில்களில் கொள்முதல் செய்தனர். தற்போது ஒரு டன் ரூ.6 ஆயிரத்து 500 என்ற விலையில் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
கலப்படம்
ஆகஸ்டு மாதம் வரை 90 கிலோ கொண்ட ஜவ்வரிசி ரூ.6 ஆயிரத்து 500 வரையும், அதேபோல ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.5 ஆயிரத்து 500 வரையும் விற்பனையானது. தற்போது விலை சரிவடைந்து ஜவ்வரிசி ரூ.3 ஆயிரத்து 800 ஆகவும், ஸ்டார்ச் மாவு ரூ.3 ஆயிரத்து 100 ஆகவும் உள்ளது. இந்த விலை குறைவுக்கு காரணம் அரவை மில்கள் மக்காச்சோள மாவினை கலப்படம் செய்வதால், அரிசி மாவு வகைகள் விலை சரிவடைந்துள்ளது.
எனவே, அரசு உணவு குற்றப்புலனாய்வு துறை மூலம் தனிப்படை அமைத்து கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து, விலை சரிவை கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரவள்ளிக்கிழங்கிற்கு தனிவாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ளார்.