அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கம்
வடகரை அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கம்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் இங்கு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 7 ஸ்மார்ட் வகுப்புகள் திறந்து வைக்கப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஷெர்லின் விமல், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.