வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
முதுமலையில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
கூடலூர்
முதுமலையில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
வனவிலங்குகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் ஆண்டுக்கு 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு முதுமலையில் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கினர். முன்னதாக நேற்று முன்தினம் வன ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் தெப்பக்காடு வன உயிரின மேலாண்மை மையத்தில் நடைபெற்றது.
கணக்கெடுப்பு தொடக்கம்
இதைத்தொடர்ந்து நேற்று வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி காலை 7 மணிக்கு தொடங்கியது. புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், வனச்சரகர்கள் விஜய், மனோகரன் உள்பட 37 குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
வனவிலங்களின் கால் தடங்கள், எச்சம், நேரில் காணுதல் உள்ளிட்ட முறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அனைத்து வகையான வனவிலங்குகள் வருகிற 28-ந் தேதி வரை கணக்கெடுக்கப்படுகிறது. தொடர்ந்து துறை ரீதியாக வன விலங்குகள் எண்ணிக்கை குறித்த பட்டியல் தயாரித்து பதிவேடுகளில் பதிவு செய்யப்படும் என்றனர்.