போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி தேனி கலெக்டர் பெயரில் மோசடி செய்ய முயற்சி


போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி  தேனி கலெக்டர் பெயரில் மோசடி செய்ய முயற்சி
x

தேனி கலெக்டர் பெயரில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயன்ற மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

போலி வாட்ஸ்-அப் கணக்கு

தேனி மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து 8088765749 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து, அலுவலர்கள் உட்பட பல நபர்களுக்கு வாட்ஸ்-அப்பில் மர்ம நபர் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாவட்ட கலெக்டர், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை நலம் விசாரிப்பது போல் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனை கண்டு சந்தேகம் அடைந்த அலுவலர்கள், அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய நபர் கன்னடம் மற்றும் இந்தியில் தெளிவின்றி பேசியுள்ளார். இந்த குறுஞ்செய்தியானது தவறான செயல்களை செய்திடும் நோக்கத்தில் அனுப்பப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

இதனையடுத்து, மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு அலுவலர்கள் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றனர். அதன்பேரில் இந்த தவறான செயலை தடுத்திடும் பொருட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவை, கலெக்டர் உடனடியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன்பேரில் தேனி சைபர் கிரைம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இந்த போலியான வாட்ஸ்-அப் எண்ணில் இருந்தோ அல்லது வேறு எண்ணில் இருந்தோ மாவட்ட கலெக்டரின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் வரப்பெற்றால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மர்ம நபர்

கலெக்டரின் பெயரில் மோசடி செய்ய முயன்ற மர்ம நபரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கேட்டபோது, "கலெக்டரின் பெயரில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கிய மர்ம நபர், அதில் கலெக்டரின் புகைப்படம், பெயரை பயன்படுத்தி நலம் விசாரிப்பது போல் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதுபோன்ற போலியான பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டாரா? என்பது விசாரணையில் தெரியவரும்" என்றனர்.


Next Story