சிறுமிகளுக்கு ரூ.1 லட்சத்துடன் மாநில விருது
சமூக முன்னேற்றத்திற்காக வீர,தீர செயல் புரிந்த சிறுமிகளுக்கு ரூ.1 லட்சத்துடன் மாநில விருது
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக வீர தீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான வருகிற ஜனவரி-24-ந்தேதி மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருத்தல் மற்றும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர் 2023 ன் படி) சிறுமிகள் எவரேனும் இருப்பின் அவர்களது விவரங்களை, நாகை புதிய கடற்கரை சாலை செல்லும் வழியில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் திட்ட செயலாக்க வளாகம் என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து 20-11-2023-ந் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.