தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் தனசேகரன் நேற்று நாகர்கோவிலில் விசாரணை நடத்தினார்.
நாகர்கோவில்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் தனசேகரன் நேற்று நாகர்கோவிலில் விசாரணை நடத்தினார்.
விசாரணை கூட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்படாத மனுக்களுக்கு மனுதாரர்களால் மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல்முறையீட்டில் உரிய பதிலளிக்காத வழக்குகளுக்கு மாநில தகவல் ஆணையர் நேரடியாக விசாரணை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில், தகவல் பெறும் உரிமைச்சட்ட விசாரணைக் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
25 மனுக்களுக்கு தீர்வு
விசாரணை கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் முதல் கட்டமாக நேற்று 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணை கூட்டம் நடைபெறும். இதில் மீதமுள்ள 25 மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்படும். கூட்டத்தில் தகவல் ஆணைய ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.