நாசரேத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கால்பந்து போட்டி தொடங்கியது
நாசரேத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கால்பந்து போட்டி தொடங்கியது
நாசரேத்:
நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கு இடைேயயான மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன், செயலாளர் ஜட்சன், நாசரேத் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
நேற்று காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் திருச்சி காஜா மியான் பள்ளி அணியும், பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் பள்ளி அணியும் மோதின. இதில் 6-1என்ற கோல் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்றது. 2-ஆவது போட்டியில் டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா பள்ளி அணியும், தூத்துக்குடி புனித லசால் பள்ளி அணியும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
மாலையில் நடைபெற்ற 3-வது போட்டியில் நெல்லை அப்துல் ரகுமான் பள்ளி அணியும், தூத்துக்குடி புனித தாமஸ் பள்ளி அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் நெல்லை அணி வெற்றி பெற்றது.
4-வது போட்டியில் குளச்சல் செயின்ட் மேரிஸ் பள்ளி அணியும், காயல்பட்டினம் எல்.கே. பள்ளி அணியும் மோதின. இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் போடவில்லை. ஆகவே டைபிரைக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில் ஆசிரியர் ஜெய்சன் சாமுவேல், உடற்பயிற்சி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர், தனபால் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.