திருநகரில் தொடங்கியது: மாநில அளவிலான ஆக்கி போட்டி
திருநகரில் 28 அணிகள் பங்கேற்கும் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கிப்போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடர்ந்து 5-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது
திருப்பரங்குன்றம்
திருநகரில் 28 அணிகள் பங்கேற்கும் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கிப்போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடர்ந்து 5-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது
மாநில அளவிலான ஆக்கி போட்டி
மதுரை மாவட்டம் திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கி வீரர்களான பாலசுப்பிரமணியம், ஜெய்சிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோரது நினைவாக 24-வது ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது.
சென்னை, திருச்சி, கோவில்பட்டி, தஞ்சாவூர், சிவகங்கை, வாடிப்பட்டி மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 28 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் காலை 4 அணியும், மாலையில் 4 அணியுமாக களம் இறங்கி மோதுகின்றனர். வெற்றி பெரும் அணிக்கு சுழற்கோப்பையும், தனிநபர் சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்ட ஆக்கி கிளப் செயலாளர் திருநகர் ரமேஷ் தலைமையில் நேற்று ஆக்கி போட்டி தொடங்கியது. மதுரை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் இந்திராகாந்தி கலந்துகொண்டு முதல் போட்டியை தொடங்கி வைத்தார்
8 அணிகள் மோதின
முதல் ஆட்டமாக கோவில்பட்டி பிலிப்ஸ் ஆக்கி அணியும், திண்டுக்கல் பாண்டியாஸ் அணியும் மோதியது. அதில் டைபிரேக்கர் முறையில் 5 க்கு 4 கோல்கணக்கில் கோவில்பட்டி பிலிப்ஸ் அணி வென்றது. இதனையடுத்து தஞ்சாவூர் அணியும், வாடிப்பட்டி டெவலப்மெண்ட் அணியும் மோதியதில் 3-க்கு 1 கோல் கணக்கில் தஞ்சாவூர் அணி வென்றது. 3-வது ஆட்டமாக ராஜபாளையம் பெஸ்ட் பிரன்ஸ் அணியும், இழப்பனூர் அணியும் மோதியதில் 3-க்கு 1 கோல் கணக்கில் ராஜபாளையம் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் திருநெல்வேலி பாளை பிரன்ஸ் அணியும் விளையாடியதில் 4 - 1 கோல் கணக்கில் கோவில்பட்டி அணி வென்றது. இதேபோல இன்றும் போட்டி தொடர்ந்து நடக்கிறது.