மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்


மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்
x

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

இதில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். அ.தி.மு.க. தரப்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

வேட்பாளர் ப.சிதம்பரம்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ப.சிதம்பரமும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக்

இதைப்போல காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா (ராஜஸ்தான்), முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் (கர்நாடகா) ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களைத்தவிர கட்சியின் மூத்த தலைவர்களான அஜய் மக்கான் (அரியானா), முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி (இருவரும் ராஜஸ்தான்), ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் (இருவரும் சத்தீஸ்கார்), விவேக் தங்கா (மத்திய பிரதேசம்), இம்ரான் பிரதாப்கார்கி (மராட்டியம்) ஆகியோரும் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


Next Story