பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட்: பெரம்பலூர் அணி வெற்றி


பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட்: பெரம்பலூர் அணி வெற்றி
x

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் அணி வெற்றி பெற்றது.

பெரம்பலூர்

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான 13-வது கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிரிக்கெட் போட்டியை ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.யும், இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவருமான சொக்கலிங்கம், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான சுனில்குமார், கல்லூரியின் உடற்கல்வியல் கல்லூரியின் முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணியும், சென்னை மாவட்ட அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவரில் 26-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெரம்பலூர் அணி 12-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட அணியும், திருப்பத்தூர் மாவட்ட அணியும், வேலூர்-ராணிப்பேட்டை அணிகளும், கன்னியாகுமரி, அரியலூர் அணிகளும் மோதுகின்றன. நாளை (திங்கட்கிழமை) காலையில் அரை இறுதி போட்டிகளும், மதியம் இறுதி போட்டிகளும் நடைபெறுகின்றன. கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு தனலட்சுமி அம்மையார் நினைவு சுழற்கோப்பையும் ரூ.25 ஆயிரம் பரிசு தொகையும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Next Story