மாநில அளவிலான தொழில்சார் போட்டிகள்
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான தொழில்சார் போட்டிகளை ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பி.கே.ரவி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் சார் போட்டிகள் 'அக்னி 2023' திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.
ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பி.கே.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் வேலூர், சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், காஞ்சீபுரம் உள்ளிட்ட 12 சரகத்திலிருந்து சுமார் 1,780 ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர். ஊர்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி. ரவி ஏற்று கொண்டார்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கான ஜோதியை அவர் ஏற்றி வைத்தார்.
பின்னர் அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
பெண்கள் பிரிவில் உள்ள ஊர்க்காவல் படையினர் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் விதத்தினை தத்துரூபமாக செய்து காட்டினர்.
இதில் கபடி, வாலிபால், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.