நூலகங்களின் நிலையும், இளைஞர்களின் வருகையும்


நூலகங்களின் நிலையும், இளைஞர்களின் வருகையும்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய தொழில் நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை காண்போம்.

தேனி

ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள்.

ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்துவிடுவார்கள்.

இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன.

கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன் பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம்.

புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.

அச்சம்

நூலகங்களில் போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்று கூறுவார்கள். நல்ல நண்பர்கள் எவ்வாறு நம்மோடு இருந்து நல்வழிப்படுத்துவார்களோ, அதுபோல், நல்ல புத்தகங்களும் நம்மை செதுக்கும். நல்வழியில் பயணிக்க வைக்கும்.

புத்தகங்களை வாசிக்கும் போது மனிதர்களிடம் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். சலனமில்லாத அமைதியும், பொறுமையும் புத்தக வாசிப்பு மூலம் கிடைக்கும். அறிவு, திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை புத்தகங்கள் ஊட்டுகின்றன.

153 நூலகங்கள்

தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 70 கிளை நூலகங்கள், 51 ஊர்ப்புற நூலகங்கள், 31 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 153 நூலகங்கள் உள்ளன. அதோடு, நூலகம் உபயோகப்படுத்துவதில் ஆர்வம் மிகுந்த வாசகர்களை கொண்டு வாசகர் வட்டம் அமைக்கப்பட்டும் செயல்பட்டு வருகிறது.தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம் மற்றும் நகர்ப்புற நூலகங்களில் போட்டி தேர்வுகளுக்கான நூல்களும் இருப்பதால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் நூலகங்களுக்கு வருகின்றனர். மற்றபடி புத்தகங்கள் வாசிக்க வருபவர்கள் எண்ணிக்கையும், புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று வாசித்து திருப்பி எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

வாசிப்பு இயக்கம்

வாசிக்கும் ஆர்வத்தோடு நூலகங்களுக்கு சென்று உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் பலரும், அடிக்கடி நூலகங்களுக்கு செல்வது இல்லை என்ற நிலையே இருக்கிறது. இதனால், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

புதிய தொழில் நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.

கவிக்கருப்பையா (பூதிப்புரம் நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்):- வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள், இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். அதற்கு நூலகங்களில் மாணவ, மாணவிகளுக்கு அடிக்கடி போட்டிகள் நடத்த வேண்டும். இன்றைக்கு மக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் அமைந்துள்ளன. ஆனால், பெரும்பாலான நூலகங்கள் ஊரில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அமைந்துள்ளன. நூலகங்களை மக்கள் வசிக்கும் இடங்களில் மையப் பகுதிகளில் அமைக்க வேண்டும். காலிப்பணியிடங்களால் நூலகங்களுக்கு நிரந்தர பணியாளர் நியமிக்காமல் வேறு நூலகர்களை பொறுப்பு அலுவலர்களாக நியமிப்பது நூலகங்கள் சீராக செயல்பட சிக்கலை உருவாக்குகிறது. நடமாடும் நூலகம் போன்று தெருக்களுக்கு சென்று வாசிப்பு இயக்கங்கள் நடத்தி புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கலாம்.

இளங்குமரன் (தேனி வையை தமிழ்ச்சங்க தலைவர்):- வாசிப்பு பழக்கம் என்பது அனைத்து வயதினருக்கும் பொருந்தும். ஆனால், சிறு வயதிலேயே அந்த ஆர்வத்தை ஊட்ட வேண்டும். தற்போது ஆசிரியர்கள் கூட குறைவான எண்ணிக்கையில் தான் நூலகங்கள் பக்கம் செல்லும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறையாவது நூலகங்கள் சென்று வரும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். நூலகம் சென்று வாசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி ஊக்கம் அளிக்கலாம். வீடுகளிலும் பெற்றோர்கள் வாசிக்கத் தொடங்கினால் அதைப் பார்த்து குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள். மாவட்ட மைய நூலகங்களில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை தனி அரங்குகளில் வைத்து காட்சிப்படுத்த முன்வரலாம்.

வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும்

லட்சுமி (இலக்கிய ஆர்வலர், தேனி):- பெரும்பாலான நூலகங்கள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் பெண்கள் நூலகங்களுக்கு செல்வது குறைந்துள்ளது. தேனியில் மைய நூலகம் முன்பு என்.ஆர்.டி. நகரில் இருந்தது. இதனால் அடிக்கடி சென்று வந்தேன். அது இடமாற்றம் செய்யப்பட்டதால் அடிக்கடி அவ்வளவு தூரம் சென்று வர முடியாத சூழல் உருவாகி விட்டது. சிறுவர், சிறுமிகளை நூலகங்களுக்கு அனுப்புவதும் இதனால் குறைகிறது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதால் வாசிப்பு இயக்கங்கள் அதிக அளவில் நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் வாசிப்பு இயக்கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். பல பள்ளிகளில் நூலகங்கள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவ பருவத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் வாசிக்கும் பழக்கத்தை கைவிட மாட்டார்கள். பெற்றோர்களும் வாசிக்கத் தூண்ட வேண்டும். வாரத்தில் ஒரு புத்தகத்தையாவது பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக வாசிக்க வேண்டும். பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை கட்டாயமாக்க வேண்டும்.

நூலக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "நூலகங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது. வாசகர் வட்டங்கள் மூலம் நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளம் வாயிலாக புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் படிக்கும் வசதி மாவட்ட மைய நூலகத்தில் உள்ளது. மாவட்ட மைய நூலகம், வடுகப்பட்டி, பெரியகுளம், தென்கரை, போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி ஆகிய கிளை நூலகங்களில் கணிப்பொறி வசதி உள்ளது. நூலகம் அமைந்துள்ள ஊர்களில் படித்தவர்கள் அனைவரையும் உறுப்பினராக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க மாநில அளவில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த பயிற்சி பெற்ற நூலகர்கள் மூலம் தேனி மாவட்டத்திலும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என்றார்.


Next Story