சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடக்கம்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன சோதனை சாவடி தொடங்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகள்
திருச்சி மாநகரத்தின் எல்லையில் ஏற்கனவே 8 போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி பாலம் - ஓயாமரி செல்லும் பகுதியில் சோதனை சாவடி எண்.5 அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒய் ரோடு ஜங்ஷன் பகுதியில் போலீஸ் சோதனை சாவடி எண்.5 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.
தானியங்கி கேமராக்கள்
இந்த அதிநவீன போலீஸ் சோதனை சாவடி எண்-5-ன் புதிய கட்டிடத்தை நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இங்கு வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள்-2 மற்றும் பொது ஒலிப்பெருக்கி வசதியும் உள்ளது. மேலும் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.
திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், சட்ட விரோத நபர்களை கண்காணிக்கவும் இந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தடுக்க...
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள திருவானைக்காவல் அழகிரிபுரம், திம்மராயசமுத்திரம், கொண்டயம்பேட்டை, கல்லணை ரோடு, திருவளர்ச்சோலை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தெரிந்து தடுக்கவும் ஏதுவாக இந்த சோதனை சாவடி அமைந்துள்ளது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.