காவல்துறைக்கு ரூ.56 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு வாகனம்
தொழில்நுட்ப வசதிகளுடன் அதிநவீன கண்காணிப்பு வாகனம் மாநகராட்சி சார்பில் டி.ஜி.பி.சைலேந்திரபாவுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழில்நுட்ப வசதிகளுடன் அதிநவீன கண்காணிப்பு வாகனம் மாநகராட்சி சார்பில் டி.ஜி.பி.சைலேந்திரபாவுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிநவீன கண்காணிப்பு வாகனம்
வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசாரால் நகர் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாநகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அவசர காலங்களில் பயன்படுத்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்துக்கு மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மாநகராட்சி சார்பில் இந்த வாகனம் நேற்று மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செந்தில்குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா, நரேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மகாதீபத்தன்று பயன்படுத்தப்படும்
இதனை தொடர்ந்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதி நவீன வசதிகள் கொண்ட வாகனத்தை காவல்துறைக்கு வழங்கிய மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. இதுபோன்று தமிழகத்தில் பல தொழில்நுட்ப வாகனங்கள் இருந்தாலும் இந்த வாகனத்தில் பல்வேறு கூடுதல் தொழில்நுட்பங்கள் உள்ளது. இந்த வாகனம் வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி மற்ற மாவட்டங்களின் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படும்.
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தன்று இந்த வாகனம் பயன்படுத்தப்படும். இது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி சென்னையிலும் கண்காணிக்கப்படும்.
தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகளவு தடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.