பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில விளையாட்டு போட்டிகள்
x

சேலத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சேலம்

விளையாட்டு போட்டிகள்

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 8 இடங்களில் ஏகலைவா மாதிரி (உண்டு உறைவிட பள்ளி) பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஏகலைவா பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.

பரிசுகள்

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது கலெக்டர் கார்மேகம் பேசும்போது, பழங்குடியின மாணவ, மாணவிகள் மனதளவிலும், உடல் அளவிலும் மேம்பட்டு பல்வேறு சாதனைகளை புரியும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மற்றும் அபிநவம் ஆகிய 2 இடங்களில் ஏகலைவா மாதிரிபள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். இதுபோன்று நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விளையாட்டிலும், கல்வியிலும் சிறந்த விளங்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில், பழங்குடியினர் நல உதவி இயக்குனர் வைரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story