பஸ்சில் டிக்கெட் கட்டணமாக ரூ.15-க்கு ரூ.16 வசூல்: அரசு போக்குவரத்து கழகம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
ரூ.15-க்கு ரூ.16 டிக்கெட் கட்டணமாக வசூலித்ததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூ.15-க்கு ரூ.16 டிக்கெட் கட்டணமாக வசூலித்ததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பஸ்சில் பயணம்
வேலூர் அருகே உள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 64). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் 13.7.2019 அன்று தனது கிராமத்தில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கண்டக்டர் அவரிடம் ரூ.16 பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கினார். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என கண்டக்டரிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு இந்த பஸ் எல்.எஸ்.எஸ். பஸ் என்று கண்டக்டர் கூறினார்.
ஆனால் கீழ்அரசம்பட்டில் இருந்து வேலூருக்கு சுமார் 32 இடங்களில் பஸ் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதனால் சம்பத் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலூர் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கூடுதலாக ஒரு ரூபாய் வசூல்
இதுகுறித்து அவர் கண்டக்டரிடம் கேட்டபோது போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்தபடி தான் நான் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடியும் என்று கூறினார்.
இதையடுத்து அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில கேள்விகள் கேட்டு போக்குவரத்து கழகத்திற்கு கடிதம் அனுப்பினார். அதன் முடிவில், அவர் பயணித்த பஸ்சில் எல்.எஸ்.எஸ். என்ற லேபிள் ஒட்டிக்கொண்டு ரூ.15-க்கு டிக்கெட் வழங்காமல் கூடுதலாக ஒரு ரூபாய் சேர்த்து ரூ.16 வசூல் செய்தது அவருக்கு தெரியவந்தது.
ரூ.50 ஆயிரம் இழப்பீடு
அதைத்தொடர்ந்து சம்பத் வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத்திற்கு அவர் இழந்த ஒரு ரூபாயை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.