அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சாலை மறியல்
திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 41 பெண்கள் உள்பட 421 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 41 பெண்கள் உள்பட 421 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சபடியை வழங்க வேண்டும்
திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தை அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2016-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான பஞ்சபடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
41 பெண்கள் உள்பட 421 பேர் கைது
இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனயைடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பெண்கள் உள்பட 421 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.