அனுமதியின்றி சிலைகள் அமைக்கக்கூடாது


அனுமதியின்றி சிலைகள் அமைக்கக்கூடாது
x

அனுமதியின்றி சிலைகள் அமைக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மதுரை

மதுரை,

அனுமதியின்றி சிலைகள் அமைக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

ரத்து செய்ய வேண்டும்

விருதுநகர் மாவட்டம் அமைச்சியார்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "அமைச்சியார்பட்டியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற உத்தரவிட்டார். சிலை வைத்தபின்பு, நடந்த அமைதி கூட்டத்தில் அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டு உள்ளது. எனவே சிலையை அகற்றுமாறு தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, பட்டா இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தகரம் வைத்து சிலை மூடப்பட்டு உள்ளது. அங்கு சிலை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்றார். பின்னர் அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, சிலை வைக்க கோரும் பகுதியில் ஏற்கனவே சாதிய மோதல்கள் நடந்துள்ளன. அதிகாரிகளிடம் மனு நிலுவையில் இருக்கும்போது, அனுமதி பெறாமல் இந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என வாதாடினார்.

அனுமதி

விசாரணை முடிவில் நீதிபதிகள், "சிலைக்கு அனுமதி கேட்டு மனுதாரர் தரப்பில் அளித்த மனுவை அதிகாரிகள் நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் போலீசாரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்-அமைச்சரின் சிலையை வைப்பதற்குகூட கோர்ட்டு நேரடியாக அனுமதி தராமல், அதிகாரிகளிடம் அனுமதிபெற அறிவுறுத்தியது. மேலும், தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை அமைக்கக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது, என்றனர்.

பின்னர், உரிய அனுமதி பெறும்வரை மனுதாரர் பகுதியில் சம்பந்தப்பட்ட சிலையை திறக்கக்கூடாது. அதற்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story