அண்ணா பூங்காவில் கருணாநிதிக்கு உருவச்சிலை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


அண்ணா பூங்காவில் கருணாநிதிக்கு உருவச்சிலை  மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
சேலம்

சேலம்,

முழு உருவச்சிலை

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தமைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை (வெண்கலம்) அமைக்கப்படும் என்ற சிறப்பு தீர்மானத்தை மேயர் ராமச்சந்திரன் வாசித்தார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

ஆய்வு அறிக்கை

பின்னர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகிப்பதற்கான குழுவினரின் ஆய்வு அறிக்கையை அதன் தலைவரான சூரமங்கலம் மண்டல குழு தலைவர் கலையமுதன் மற்றும் கவுன்சிலர்கள் மேயரிடம் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், சேலம் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. குடிநீர் திட்டப்பணிக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செயல்படுத்தினால் 2 நாளைக்கு ஒருமுறை சீரான குடிநீர் மாநகர மக்களுக்கு வழங்க முடியும். மேலும் தினமும் தண்ணீர் வழங்க கூட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கொறடா செல்வராஜ் பேசும் போது, எனது வார்டில் சுடுகாடு பிரச்சினை பற்றி பலமுறை பேசியும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். மேலும் அவர் மற்ற வார்டுகளிலுள்ள குறைகளை எடுத்து கூறும் போது சில கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களது வார்டின் குறைகள் குறித்து நாங்கள் தெரிவிப்போம் என்றும், உங்களது வார்டின் குறையை மட்டும் தெரிவித்தால் போதும் என்றும் கவுன்சிலர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து செல்வராஜ் பேசும் போது, நான் எதிர்க்கட்சி கொறடா என்பதால் அனைத்து வார்டுகளில் உள்ள பிரச்சினைகளையும் தெரிவிக்கலாம் என்றார். இதனால் மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய்கள்

இதன் பின்னர் கவுன்சிலர்கள் பேசும் போது, பள்ளப்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தெருநாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். மேலும் தெருநாய்களை பிடிக்க கூடுதல் வாகனங்கள் வழங்க வேண்டும்.

மாநகரில் பல பகுதிகளில் பிளாஸ்டி கழிவுகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இதை அகற்றுவதுடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.50 லட்சம் என மக்கள் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மாநகராட்சியில் உள்ள 16 மருத்துவ மையங்களிலும் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் வருகிறது. இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மாநகராட்சியில் கூடுதல் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்.

நிலுவை தொகை

44-வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன் பேசும் போது, ஓய்வு பெற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து துணை மேயர் சாரதாதேவி பேசும் போது, சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் கவுன்சிலர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


Next Story