தமிழக கோவிலில் கடத்தப்பட்ட சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு


தமிழக கோவிலில் கடத்தப்பட்ட சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு
x

தமிழக கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை,

நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில், ராணி செம்பியன் மகாதேவிக்கு 3½ அடி உயரத்தில் அழகான உலோக சிலை செய்து வைக்கப்பட்டது.

அந்த சிலையை மக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபட்டு வந்தனர்.

சிலை கடத்தல்

இந்த சிலை மர்மநபர்களால் கடத்தப்பட்டது. இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடத்தப்பட்ட செம்பியன்மகாதேவி சிலை, அமெரிக்காவில் 'பிரீர் கேலரி ஆர்ட் வாஷிங்டன்' என்ற அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அந்த சிலை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையோடு திருடப்பட்டுள்ளது என்றும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது.

திருட்டில் தொடர்பில்லை

சிலை கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையில், செம்பியன் மகாதேவி சிலை சுதந்திரம் அடைவதற்கு முன்பே திருடப்பட்டுள்ளது என்றும், எனவே சிலை திருட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்பு இல்லை என்றும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த கேவோர்க்கியன் என்பவர் செம்பியன் மகாதேவி சிலையை வாங்கி, அமெரிக்க அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லை. இந்த சிலையை யாரிடம் இருந்து வாங்கினார் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

அதேசமயம் தற்போது கைலாசநாதர் கோவிலில் இருக்கும் 1½ அடி உயர செம்பியன்மகாதேவி சிலை போலியானது என்றும், உண்மையான சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிலையை தமிழகத்துக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story