ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை பாதுகாப்பு மையத்தில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

தஞ்சாவூர்

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை பாதுகாப்பு மையத்தில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

வரதராஜ பெருமாள் கோவில் சிலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட உலோகத்தால் ஆன சாமி சிலைகள் திருட்டு போயின. இதுதொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் இந்த சிலை திருட்டு வழக்கின் புலன் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தொல்லியல் நிபுணர்கள் ஒப்பீடு

இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் செந்துறை வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்ட உலோக சாமி சிலைகளில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதும், அங்கிருந்து ஏலம் விடப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் அந்த ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். வரதராஜ பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும் தொல்லியல் துறை நிபுணர்களின் உதவியோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது 2 புகைப்படங்களிலும் இருப்பது ஒரே சிலை என்பது உறுதியானது.

இந்தியாவிடம் ஒப்படைப்பு

இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலையை மீட்க காவல்துறை தலைமை இயக்குனர் மூலம் தமிழக அரசின் உள்துறைக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஏலம் எடுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர், சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்திய அரசின் உள்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளால் ஆஸ்திரேலியாவில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஏஜென்சிகளின் பரிசோதனைக்கு பிறகு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

கடந்த 17-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் டெல்லி சென்ற தனிப்படை போலீசார் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பெற்று சென்னை கொண்டு வந்தனர். இந்த சிலையை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நீதிபதி சிவசக்திவேல், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கும்பகோணத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story