தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்
முக்கிய சாலைகள் மற்றும் புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டரிடம் சிவசேனா அமைப்பினர் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர்.
இந்த நிலையில் சிவசேனா அமைப்பின் மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, மாநில செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள், புறம்போக்கு நிலங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த சிலைகளும் அகற்றப்படவில்லை.
இதேபோல் திண்டுக்கல் கடைவீதிக்கு செல்லும் சாலை, சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலக சாலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சின்னாளப்பட்டியை அடுத்த பூஞ்சோலை பகுதியில் உள்ள மதுபான கடை, சின்னாளப்பட்டியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் மயானத்துக்கு எதிரே உள்ள மதுபான கடை ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை
இதேபோல் நத்தத்தை அடுத்த கோவில்பட்டி தாதாபிள்ளை தெருவை சேர்ந்த கல்யாணி என்பவர் கொடுத்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்துவிட்டு, என்னையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் எதற்காக வந்தனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நத்தம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு என்பவர் கொடுத்த மனுவில், காந்திஜெயந்தியையொட்டி தாண்டிக்குடி பகுதியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
தரம் குறைந்த உணவு
நிலக்கோட்டையை அடுத்த நூத்துலாபுரம் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் நல விடுதியை சேர்ந்த மாணவிகள் கொடுத்த மனுவில், விடுதியில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்ததாக உள்ளது. இதனால் மாணவிகளுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. எனவே எங்கள் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 186 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.