பராமரிக்கப்படாத தலைவர்களின் சிலைகள்


பராமரிக்கப்படாத தலைவர்களின் சிலைகள்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தலைவர்களின் சிலைகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

தேனி

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பொறுமை இல்லை

சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.

அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.

அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அலங்காரம்

சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.

தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.

தேனி மாவட்டத்தில் மகாத்மா காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கர், முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சி., பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தலைவர்களின் சிலைகளோடு உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த திருவள்ளுவர், முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலைகளும் மாவட்டத்தை அலங்கரிக்கின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 99 சிலைகள் உள்ளன.

பெரும்பாலான சிலைகளுக்கு கூண்டு வலை அமைக்கப்பட்டுள்ளன. அவை அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் தலைவர்களின் சிலைகள் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. சிலைகள் அமைந்துள்ள மண்டபம் சேதம் அடைந்தும், சிலைகளின் மீது பறவைகள் எச்சமிட்ட நிலையிலும் அசுத்தமாகவும், அழுக்கு படிந்தும் காட்சி அளிக்கிறது.

இது அத்தகைய தலைவர்களின் தொண்டர்களை வேதனை அடையச் செய்கிறது.

எம்.ஜி.ஆர். சிலை

அந்த வகையில் தேனி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மண்டபத்துடன் கூடிய எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் இந்த சிலையை திறந்து வைத்தார். அப்போது இது, அல்லிநகரம் தொடக்க கூட்டுறவு விவசாய வங்கி என்ற பெயரில் செயல்பட்டது. அந்த வங்கி நிர்வாகிகள் சார்பில் இந்த சிலையுடன் கூடிய சிறிய மண்டபம் நிறுவப்பட்டது.

தற்போது இந்த சிலை பறவைகளின் எச்சம் விழுந்தும், அழுக்கு படிந்தும் காட்சி அளிக்கிறது. மண்டபத்தின் மேற்கூரை, சுற்றுச்சுவர் சேதம் அடைந்து சிமெண்டு பெயர்ந்து விழுந்துள்ளது. நாலாபுறமும் சிலந்தி வலைகள் பின்னியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த சிலை பராமரிக்கப்படவில்லை.

புதுப்பிக்க வேண்டும்

இதுகுறித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மணவாளன் கூறுகையில், "மாவட்டத்தின் தலைநகரான தேனியில் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஒரே சிலை இது தான். அதுவும் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் உள்ளது. எம்.ஜி.ஆர். பிறந்தநாள், நினைவு நாள் போன்ற நாட்களில் மட்டும் அ.தி.மு.க.வினர் சிலையை கழுவி சுத்தம் செய்து மாலை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. கூட்டுறவு சங்கம் சார்பில் சிலையை முறையாக பராமரிக்க வேண்டும். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இந்த சிலை முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மண்டபம் கட்டப்பட்டு 31 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே, இங்கு மண்டபத்தை புதுப்பித்து, எம்.ஜி.ஆருக்கு அரசு சார்பில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்" என்றார்.

அண்ணா சிலை

சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை விலக்கு பகுதியில் காமராஜர், அண்ணா, முத்துராமலிங்கத்தேவர், தியாகி விஸ்வநாததாஸ் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் தெரியாத அளவுக்கு சிலைகளின் முன்பு சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூண்டுக்குள் சிலைகள் இருக்கும் நிலையில், அதுவும் தெரியாத அளவுக்கு கடைகள் உள்ளன. இதனால், சிலைகளுக்கு மாலை அணிய வருபவர்கள் சிரமம் அடைகின்றனர்.

இதுகுறித்து சின்னமனூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வேந்திரன் கூறுகையில், "முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காக திராவிட முன்னேற்ற கழத்தை தொடங்கி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங் களையும் கொண்டு வந்தவர். தமிழக மக்களால் போற்றப்படும் தலைவர் அவர். அந்த தலைவரின் உருவச்சிலை போதிய அளவு பராமரிப்பு இன்றியும் தனியாக ஒரு இடத்தில் கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். அண்ணா கண்ட திராவிட மாடல் ஆட்சியை இன்றைக்கு திறம்பட நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் சிலையை ஊரின் மையப்பகுதியில் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும், வருங்கால சந்ததியினர் அவரின் வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு நூலகமும் அமைக்க வேண்டும்" என்றார்.

காந்தி சிலைகள்

பெரியகுளத்தில் தேனி சாலையில் காந்தி சிலை உள்ளது. அந்த சிலை போதிய பராமரிப்பு இன்றி தூசு படிந்து காணப்படுகிறது. மகாத்மா காந்தி மதுவுக்கு எதிரானவர். ஆனால் அவருடைய சிலை அருகில் தனியார் மதுபான பார் உள்ளது. மது குடித்து தள்ளாடுவதும், தகராறு செய்வதுமான காட்சிகள் காந்தி சிலை முன்பு அன்றாடம் நடப்பது மக்களுக்கு வேதனை கொடுப்பதாக உள்ளது. அதுபோல் சின்னமனூரில் உள்ள காந்தி சிலை அருகிலும் இரவு நேரங்களில் மது அருந்துகின்றனர். அப்பகுதி சுகாதாரக்கேடாகவும் காட்சி அளிக்கிறது. எனவே சிலையையும், சிலை அமைந்துள்ள பகுதியையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story