சிவகாசி மாநகராட்சி சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கும் நிலை
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கழிப்பறை வசதி
சிவகாசி நகர்பகுதியில் பல வீடுகளில் போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது. அப்போதைய நகராட்சி சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்களை தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பல இடங்களில் பெண்கள் பொதுவெளி கழிப்பறைகளை பயன்படுத்தி வரும் நிலை தொடர்கிறது. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு அதனை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
போதிய பராமரிப்பு
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 25 வார்டுகள் முதல் 48 வார்டுகள் வரை உள்ள பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரவளாகங்கள் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அதில் பல சுகாதார வளாகங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக சுகாதார வளாகங்கள் பராமரிக்க அப்போதைய நகராட்சி நிர்வாகம் உரிய தொகைகள் ஒதுக்கவில்லை. இதனால் சுகாதார வளாகங்கள் போதிய பராமரிப்பு இன்றி தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டணம் வசூல்
சிவகாசி பகுதியில் தற்போது மாநகராட்சியின் பராமரிப்பில் 60 சுகாதார வளாகங்கள் உள்ளன. இதில் 3 சுகாதார வளாகங்கள் மட்டும் பொது ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வசூலாகும் தொகைகள் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மற்ற 57 இடங்களில் உள்ள சுகாதார வளாகங்கள் தனிநபர்களிடம் உள்ளது. இந்த சுகாதார வளாகங்கள் பலவற்றில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று வசூலிக்கப்படும் கட்டண தொகைகள் தனிநபர் வசம் தான் செல்கிறது. ஆனால் ஆண்டு தோறும் பராமரிப்பு செலவு மட்டும் மாநகராட்சியில் இருந்து செய்யப்பட்டு வருகிறது.
மீட்கப்படுமா?
இதனால் நகராட்சிக்கு வர வேண்டிய முறையான கட்டண வசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒருகுறிப்பிட்ட தொகை இழப்பாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தனிநபர் வசம் உள்ள கழிப்பறைகளை மீட்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிநபர்கள் வசம் உள்ள 57 கழிப்பறைகளை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.