ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தி சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில மாநாட்டில் தீர்மானம்
ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தி சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வணிகர் தினமான நேற்று 'வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம்' என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜாபர்அலிஉஸ்மானி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாநில பொருளாளர் அப்துல் சமத், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் வர்த்தக அணியின் மாநில நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் அதிகப்படியான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பெறும் அதிக அதிகப்பட்ச வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச வரிஅமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தி சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் சமீபகாலமாக வியாபார நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் சமூகவிரோத கூட்டம் ஆங்காங்கே தலை தூக்கி வருகின்றது. இதை காவல்துறை மூலம் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி, வணிகர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.