நண்பர்போல் பழகி கார் திருட்டு
திண்டிவனத்தில் நண்பர்போல் பழகி கார் திருடப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பியை சேர்ந்தவர் தாஸ்(வயது 43). இவர் கடந்த மாதம் 31-ந் தேதி காலை பெருமாள்பேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருடன் மது அருந்தினார். அப்போது, அங்கு நாகர்கோவிலை சேர்ந்த பெரியசாமி என்பவர் அறிமுகமாகி நண்பரானார்.
பின்னர் 3 பேரும் மது குடித்துவிட்டு, தாசின் காரில் செஞ்சி சாலையில் உள்ள இரவு தேநீர் விடுதியில் திண்பண்டங்களை வாங்கினர். அந்த சமயத்தில் பெரியசாமி திடீரென காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார். அப்போதுதான், மது அருந்தும்போது நண்பர் போல் பழகி நூதன முறையில் காரை திருடிச்சென்றது தாசுக்கு தெரியவந்தது.
வாலிபர் கைது
இது குறித்து ரோஷனை போலீஸ் நிலையத்தில் தாஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட காரை தேடி வந்தனர். இதனிடையே அந்த கார், தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் வாலிபர் ஒருவர் இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ்(27) என்பதும், இவரது நண்பரான பெரியசாமி திருடிய காரை விற்றுதருமாறு ஒப்படைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர். அந்த கார் மீட்கப்பட்டது. தலைமறைவான பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.