சிதம்பரம் அருகேஆவின் பால் கடையில் பணம் திருட்டு
சிதம்பரம் அருகே ஆவின் பால் கடையில் பணம் திருடு போனது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு பெரியார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் சிதம்பரம் அடுத்த நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.37 ஆயிரத்து 490-ஐ காணவில்லை. அதனை மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.