கூடுதலாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


கூடுதலாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலூர்

ஒன்றியக்குழு கூட்டம்

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யாகமல்பிரசாத் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:-

ஒன்றியக் குழு துணைத் தலைவர் கஜேந்திரன்:- பாலம்பாக்கம் மற்றும் நாகநதியில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பள்ளிகளை நடத்தி வருபவர், முதுமை காரணமாக பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது என்றும், பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து ஓரு வருடம் ஆகிறது. இதுவரை அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இந்த அலுவலக வளாகத்திலேயே கல்வித்துறை அலுவலகம் இருந்தும் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்வதில்லை. அலுவலகத்திற்கு நேரில் சென்றாலும் அதிகாரிகள் இருப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்ட வேண்டியதுதான்.

அதிக நிதி வழங்க வேண்டும்

கவுன்சிலர் சீனிவாசன்:-

15-வது நிதிக்குழுவில் செய்யப்பட்ட வேலைகளுக்கு கடந்த 8 மாதமாக பணம் வழங்கவில்லை. அதேபோல் நமக்கு நாமே திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கும் இதுவரை பணம் வழங்கப்பட வில்லை. வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுவதால் ஒன்றியத்தில் பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது.

விஸ்வநாதன்-

2019-20, 2020-21-ம் ஆண்டு பணிகளுக்கு இப்போது பில் பாஸ் செய்தால் எப்படி?. 1½ வருடத்தில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒன்றிய பொது நிதியில் தலா ஒரு பணி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story