கையாடல் செய்த பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கையாடல் செய்த பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலவரதன், இயக்குனர்கள் வெங்கடாசலம், ராமச்சந்திரன், செல்வராஜ், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் செயலாளர்கள் ரகுநாதன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கடன் சங்கத்தில் செய்த கையாடல் காரணமாக 435 விவசாயிகள் (சங்க உறுப்பினர்கள்) கடந்த 18 வருடங்களாக கடன் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னாள் சங்க செயலாளர் மற்றும் நிர்வாகத்தினர் செய்த கையாடல் காரணமாக சங்கத்திற்கு ரூ.6 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட 435 விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டம் அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் பேசினர்.
தொடர்ந்து சங்க முன்னாள் செயலாளர் ரகுநாதன் கையாடல் செய்த ரூ.1 கோடி 92 லட்சமும், கோவிந்தராஜ் கையாடல் செய்த ரூ.97 லட்சம் ஆகியவற்றை வசூல் செய்ய அவர்களின் சொத்தை கையகப்படுத்தி ஏலம் விட்டு பணத்தை மத்திய வங்கிக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கையாடல் செய்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 435 விவசாயிகள் யாரும் கடன் பெறவில்லை என்று நிரூபணம் ஆகியும் அவர்கள் மீது உள்ள கடனை ரத்து செய்து அவர்களுக்கு மீண்டும் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க இயக்குநர்கள் பானுகருணா மூர்த்தி, செல்வி சுந்தரராஜ், விஜயசெல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க இயக்குனர் கருணாகரன் நன்றி கூறினார்.