மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்


மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2022 11:17 PM IST (Updated: 6 Dec 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந்தேதி வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் காணொலி காட்சியில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைநீரை அப்புறப்படுத்தும் அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கினால் பொதுமக்களை உடனடியாக அருகேயுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை

கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்கவும், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மின்வயர்களின் அருகே மற்றும் உரசும் நிலையில் காணப்படும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள பட்டுப்போன மற்றும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை சம்மந்தப்பட்ட துறையினர் அகற்ற வேண்டும். மரம் அறுக்கும் எந்திரம், பொக்லைன் எந்திரம், மணல் மூட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் வரும் 3 நாட்களுக்கு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறையினர் இணைந்து மழையினால் ஏற்படும் பயிர்சேதங்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். பின்னர் அதற்கு நிதியுதவி கோரி அரசுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து நிவாரண முகாம்களையும் நேரில் தணிக்கை செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.



Next Story