வேலூர் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
வேலூர் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிகர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
வேலூர் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிகர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் நகரின் முக்கிய வணிகபகுதியாக லாங்குபஜார் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் மற்றும் நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். எனவே அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு நடைபாதையை வணிகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பழக்கடைகள் அங்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் லாங்கு பஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நடைபாதை ஆக்கிரமிப்புகள், பழக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் சண்முகனடியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், வணிகர் சங்க நிர்வாகிகள் ஞானவேலு, அருண்பிரசாத், பழக்கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜூ உள்ளிட்ட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்பு
கூட்டத்தில் பேசிய போலீசார் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபாதையை ஒட்டி உள்ள கடைக்காரர்கள் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்க கூடாது. மேலும் கடையின் முன்பு அனுமதிக்கப்பட்ட அளவை விட பெரிய அளவிலான கூரை அமைக்க கூடாது. லாங்கு பஜாரில் சுழற்சி முறையில் ஒருபக்கம் மட்டுமே இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். தள்ளுவண்டி பழக்கடைகள் அனைத்தும் பழைய மீன்மார்க்கெட் அமைந்துள்ள இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அதையடுத்து நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்படும். அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
பின்னர் வணிகர்கள் கூறுகையில், நடைபாதையை ஒட்டி உள்ள கடைகளில் வெயில் மற்றும் மழைநீர் வராமல் தடுக்க கடையின் முன்பு கூரை அமைத்துள்ளோம். பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக கூரையின் அளவு மாற்றப்படும். அதை குறிக்கும் வகையில் பெயிண்டால் கோடு வரைந்து அதற்குள் கடை அமையும் படி பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.
அடிப்படை வசதிகள்
பழக்கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜூ கூறுகையில், கடைகளை பழைய மீன் மார்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக மின்விளக்கு, சுகாதாரம், கழிவறை போன்றவை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முக்கியமாக கடையின் அளவு போதிய அளவில் ஏற்படுத்தி தர வேண்டும். மக்கள் அங்கு வரும் வகையில் பழைய மீன் மார்க்கெட் முன்பு பஸ் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்.
இதுபோன்ற எங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால் நாங்கள் பழைய மீன்மார்க்கெட் இடத்துக்கு செல்கிறோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.