தூத்துக்குடியில் பூங்காக்களை மேம்படுத்த நடவடிக்கை: மேயர்


தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி

காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு சாலை பணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஜனவரி மாதம் முதல் சாலை பணிகள் தொடங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு முன்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2008-ம் ஆண்டு தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 32 வார்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதே போன்று கருப்பு நிற குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். இந்த பணிகள் நடைபெறும் பகுதி தவிர மற்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.

பூங்காக்கள் மேம்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துநகர் பூங்காவில் விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் கூடுகிறார்கள்.

வருகிற காணும் பொங்கலை முன்னிட்டு மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களும் மேம்படுத்தப்பட்டு தயாராக வைக்கப்பட உள்ளது. தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை இரவு 10 மணி வரை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படும். வடக்கு மண்டல பகுதியில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதுவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியிலும், முள்ளக்காடு பகுதியிலும் புதிய இடங்கள் கண்டறியப்பட்டு பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

அனைத்து வார்டுகளிலும் மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ரெயில்நிலையத்துக்கு செல்வதற்கான புதிய சாலை அமைக்க, ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளோம். மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story