டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை
டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கூறினார்.
ஆய்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆஸ்பத்திரியில் செயல்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும், ஆஸ்பத்திரி நோயாளிகள் பிரிவில் நோயாளிகளிடம் தரப்படுகின்ற சிகிச்சைகள், வழங்கப்படுகின்ற உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரி கழிவறைகளை பார்வையிட்ட அவர், மகப்பேறு மைய கட்டிடத்துக்கு சென்று பிரசவத்துக்கு வந்த தாய்மார்களிடம் சிகிச்சை குறித்தும், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மூத்த டாக்டர் மருதுதுரை, மருத்துவத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ.21 கோடியில் 4 மாடி கட்டிடம்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் முழுமையான ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் கூடுதலாக 4 மாடி கட்டிடம் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு சுகாதாரத்துறை அமைச்சரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய கட்டுமானத்துக்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
சிறப்பு கலந்தாய்வு
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக முதல் கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 5 அல்லது 6-ந்தேதிகளில் இரண்டாம் கட்ட நேர்காணல் நடத்தப்பட்டு, விரைவில் நியமிக்கப்படுவார்கள். மேலும் புதிதாக பணி நியமனம் செய்யப்படும். திருவாரூர், நாகை மாவட்டங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆஸ்பத்திரிகளில் பணி நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.