சமரச மையங்கள் மூலம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை-கூடலூரில் நடந்த முகாமில் நீதிபதிகள் பேச்சு
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையங்கள் மூலம் பேசி தீர்வு காணலாம் என கூடலூர் கோர்ட்டில் நடந்த விழிப்புணர்வு முகாமில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையங்கள் மூலம் பேசி தீர்வு காணலாம் என கூடலூர் கோர்ட்டில் நடந்த விழிப்புணர்வு முகாமில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு முகாம்
கூடலூர் தாலுகா நீதிமன்றம் சார்பில் சமரச மைய வார முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து சமரச விழிப்புணர்வு மற்றும் பலன்கள் என்றால் என்ன என்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
முகாமுக்கு கூடலூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சசின் குமார், கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
வழக்கு தரப்பினர்கள் தங்களுடைய முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமுகமான தீர்வு காண்பதே சமரசம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு வழக்கறிஞர் மூலமாக அனுப்பி தீர்வு காணலாம்.
சமரசம் ஏற்படவில்லை என்றால் நீங்கள் வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம். சமரச மையத்தில் உங்களுடைய நிலுவை வழக்குகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரச மையத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தைகள் பதிவு செய்யப்பட மாட்டாது. ரகசியம் காக்கப்படும். மிக எளிய முறையில் விரைவாகவும் பண விரயம் இல்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை காண சமரசம் மையம் உதவுகிறது. இதில் காணப்படும் தீர்வு இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் சமரசம் மைய ஆலோசகர்கள் வழக்கறிஞர்கள் அப்சல்ஜா, கிருஷ்ணகுமார், பாஸ்கரன், சுதீஷ்குமார், சுரேஷ் பிரகாசம், சினு வர்கிஷ் ஆகியோர் சமரச மையம் குறித்தும், அதன் நன்மை பற்றியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.