பனிக்காலங்களில் ரெயில்களை பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை - ரெயில்வே நிர்வாகம் தகவல்
பனிக்காலங்களில் ரெயில்களை பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் தொடங்கி நீடித்துவருகிறது. தமிழகத்திலும் காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது. எனவே, ரெயில்களை பாதுகாப்பாக இயக்கும் விதமாக, பல்வேறு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில் இயக்கத்தில் பயணிகள் பாதுகாப்பு முக்கியமானதாக இருக்கிறது. எனவே, பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது, ரயில்களை பாதுகாப்பாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரெயில் இன்ஜின்களின் முகப்பு பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பொருத்துவது, பனி மூட்டத்தை நீக்கும் வகையில் கருவிகளைப் பொருத்துவது, மணிக்கு 60 முதல் 75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
இதைப் பின்பற்றவும், ரெயில் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ரெயில்களின் சேவையில் மாற்றம் இருந்தால், பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.