குமரியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் குமரியில் விமானநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
நாகர்கோவில்:
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்தால் குமரியில் விமானநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
மத்திய மந்திரி வி.கே.சிங்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இணைக்கும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூலம் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்திற்காக நாட்டப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரசார் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒழுக்கமற்ற அநாகரிக செயல்.
மத நல்லிணக்கம் சீர்குலைவு
ராகுல்காந்தியின் பாதயாத்திரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் யாத்திரை அல்ல. அது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான யாத்திரை. இதில் அரசியலையும், மதத்தையும் இணைத்துள்ளார். யாத்திரையின் போது சில மத தலைவர்களை ராகுல்காந்தி சந்தித்துள்ளார்.
இந்தியா கடந்த பல நூறு ஆண்டுகளாக மதசார்பற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் ராகுல்காந்தி தனது யாத்திரையின் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள 4 வழிச்சாலை பணிகள் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. சாலை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்.
விமான நிலையம்
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு மற்றும் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தால் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாவதியான சுங்கச்சாவடிகளில் பணம் வசூல் செய்தால் புகார் செய்யுங்கள். சுங்கச்சாவடிகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அது உட்கட்சி விவகாரம். அதைப்பற்றி பேச விருப்பமில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கல்வெட்டை பார்வையிட்டார்
முன்னதாக மத்திய இணை மந்திரி வி.கே.சிங் நேற்று காலையில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தர்மகர்த்தா கே.மனோகரச்செல்வன் இல்லத்துக்கு சென்றார். பின்னர் கன்னியாகுமரி மகாதானபுரம் அருகே உள்ள நரிக்குளம் மேம்பாலம் பகுதியில் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பிரதமர் மோடியின் படம் சேதப்படுத்தப் பட்டுள்ளதை பார்வையிட்டார்.
அவருடன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய தலைவர் சுயம்பு உள்பட பலர் உடனிருந்தனர்.