30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை


30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
x

குமரி மாவட்டத்தில் 30் ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 30் ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்ற தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை வழங்கினார்.

ஆலோசனைக் கூட்டம்

குமரி மாவட்ட போலீசாருக்கான மாதாந்திர குற்றத் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன், துணை சூப்பிரண்டுகள் ராஜா (கன்னியாகுமரி), தங்கராமன் (குளச்சல்), கணேஷ் (தக்கலை) மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கேட்டறிந்தார். பின்னர் அவர் போலீசாருக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:-

வாரந்தோறும் ஆய்வு

குமரி மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை விரைவாக பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தீவிரம் காட்ட வேண்டும்.

ரவுடிகள் பட்டியலை சரிபார்த்து, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் ஜாமீனில் வெளியே வராத அளவுக்கு அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோர்ட்டுகள் மூலம் வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் தீவிரம் காட்ட வேண்டும். இதுதொடர்பாக நானே வாரந்தோறும் போலீஸ் நிலையம் வாரியாக ஆய்வு மேற்கொள்வேன்.

கொலை வழக்குகள்

சிறு, சிறு போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து கோர்ட்டு மூலம் தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அந்த கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்து இந்த வழக்குகளை விரைவாக முடிக்க அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரில் சந்திக்கலாம்

போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலதாமதம் செய்யக்கூடாது. வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை என்னை நேரில் சந்தித்து தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள், அரசு குற்றவியல் வக்கீல்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று காலையில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பயன்படுத்தும் காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், ரோந்து செல்லும் போலீசாரின் வாகனங்கள் அனைத்தையும் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என போலீசாரிடம் கேட்டறிந்தார்.


Next Story