குடிநீரை சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஊராட்சி பகுதிகளில் குடிநீரை சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் ஒன்றிய தலைவர் புலிவலம் தேவா தெரிவித்தார்.
ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தேவா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரைதியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
மணிகண்டன்: அலிவலம் ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் தார்ப்பாய் போட்டு கொண்டு வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சுடுகாடு சாலை, அங்காடி சாலை, கீழத்தெரு சாலை உள்ளிட்ட சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அவற்றை சீரமைக்கவேண்டும்.
நன்றி
முருகேசன்: தண்டலை ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுக்கடைகள் அகற்ற உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
சாலைப்பணிக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் ஒன்றியத்துக்கு சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
குணசேகரன்: வைப்பூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு மின்இணைப்பு தரப்படாமல் உள்ளதால் அதை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
சுகாதார ஆய்வாளர் காளமேகம்: ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டியை மாதம் 2 முறையாவது சுத்தம் செய்து குடிநீர் வினியாகிக்க வேண்டும். சுகாதார மற்ற குடிநீரால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
துணைத்தலைவர்: ஒன்றியத்துக்கு வரும் நிதி அனைத்து உறுப்பினர்களின் பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 2019-20-ம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட பணிகள் பாதியிலேயே நிற்கிறது. அந்தப்பணிகளின் நிலவரம், தற்போதைய நிலை, ஒப்பந்தக்காரர் யார் என்கிற விவரம் ஆகியன தலைவர் பார்வைக்கு உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும்.
சுத்தமாக வழங்க நடவடிக்கை
ஒன்றிய தலைவர்: வரும் நிதியில் ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் கட்டித்தரப்படும். ஒன்றியத்தில் 80 சதவீதம் சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. 100 சதவீத பணிகள் விரைவில் நிறைவேற்றபடும். நகர் விரிவாக்கம், புதிய நகர்கள் உருவாகி வருவதால் நமது ஒன்றியத்துக்கு வரும் நிதி போதவில்லை. கூடுதலாக நிதி ஒதுக்கினால் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு விடும். ஊராட்சி பகுதிகளில் குடிநீரை சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுப்பிரமணியன், புவனேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.