அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்


அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM (Updated: 27 May 2023 6:45 PM)
t-max-icont-min-icon
நாகப்பட்டினம்

அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

கலெக்டராக பொறுப்பேற்பு

நாகை மாவட்ட கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

இதைதொடா்ந்து நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவரை, கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அங்குள்ள கோப்புகளில் கையெழுத்திட்ட ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி, வரலாற்று சிறப்புமிக்க நாகை மாவட்டத்திற்கு கலெக்டராக பொறுப்பு ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அனைத்துத்துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு செல்ல முழுமையான முயற்சிகள் எடுக்கப்படும்.

கூடுதல் முக்கியத்துவம்

குடிநீர் திட்டங்கள், மீன்வளத்துறை திட்டங்கள், ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் உள்ளிட்ட மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாராய புழக்கத்தை ஓழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவி ஏற்பு விழாவின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story