சத்தியமங்கலம் நகராட்சி வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; நகர்மன்ற தலைவர் தகவல்
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தெரிவித்து உள்ளார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தெரிவித்து உள்ளார்.
கூட்டம்
சத்தியமங்கலம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணகுமார், துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் சக்திவேல், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தனலட்சுமி (அ.தி.மு.க.):- எனது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிதாக கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள அங்கன்வாடி மையம் செயல்படுவதில்லை. அங்கு சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- விரைவில் கழிப்பிட வசதி செய்து தரப்படும். பயன்படாத அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதார் மையம்
எஸ்.சி.சீனிவாசன் (தி.மு.க.):- ஆதார் மையம் சத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மையம் தற்போது இல்லை. எனவே மீண்டும் ஆதார் மையத்தை நகராட்சி வளாகத்தில் அமைக்க வேண்டும்.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாவித்திரி (தி.மு.க.):- மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழி குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பல கூட்டங்களில் கூறிவிட்டேன். ஆனால் இதுவரை வைக்கப்படவில்லை
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகராஜ் (கொ.ம.தே.க.):- எனது வார்டில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என பதவி ஏற்ற நாளில் இருந்து கூறி வருகிறேன். இதுகுறித்து அதிகாரிகளிடமும் கூறியும் பலன் எதுவும் இல்லை.
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- ஒவ்வொரு வார்டாக குடிநீர் வினியோகம் சீராக்கப்பட்டு வருகிறது. உங்கள் வார்டிலும் குடிநீர் வினியோகம் சீராக்கப்படும்.
சாவித்திரி (தி.மு.க.):- எனது வார்டில் உள்ள லே-அவுட் ஒன்றில் சிறு, சிறு பாலங்கள் எல்லாம் பழுதாகிவிட்டது. பொதுமக்கள் நடப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள்.
20 பேட்டரி வாகனங்கள்
தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி:- பாலங்களை பார்வையிட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
பின்னர் கூட்டத்தில் ஆர்.ஜானகி ராமசாமி கூறுகையில், 'வீதிகளில் குப்பைகளை அள்ளிச்செல்லும் 20 பேட்டரி வாகனங்களும் பழுதாகிவிட்டது. அவைகளை பழுது நீக்க ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யவும், ரேபிஸ் நோய் தடுப்பூசி 400 நாய்களுக்கு செலுத்தவும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கப்படும். சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்துக்கு ரூ.5 லட்சம் செலவில் உணவுப்பொருட்கள் வைப்பு அறை கட்டப்படும்,' என்றார்.