தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சாலை மறியல்


தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சாலைமறயலில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஆலையில் ஜிப்சம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோரிக்கை

தூத்துக்குடியில் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. அப்போது, ஜிப்சம் மற்றும் கழிவுகள் அகற்றுதல் என்ற பெயரிலோ, பராமரிப்பு என்ற பெயரிலோ உச்சநீதிமன்ற விசாரணையில், தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி கொடுத்து விடக்கூடாது. உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணையை விரைந்து நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை சூப்பிரண்டுகள் சுரேஷ், சத்தியராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வக்கீல் அரிராகவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் காதர் மைதீன், ம.தி.மு.க மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயிலை போலீசார் மூடினர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அதனை ஏற்கவில்லை.

மேலும், தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்ளிட்ட 98 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story