ஸ்டெர்லைட் விற்பனை; முதல் அமைச்சருக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் மெய்யநாதன்
ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய எடுத்த முடிவு முதல் அமைச்சருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்.
சென்னை,
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1996-ம் ஆண்டு முதல் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி போராட்டம் 100-வது நாளை எட்டியபோது, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் நடந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. உடனடியாக, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அன்று மாலையே ஸ்டெர்லைட் ஆலை மூடி 'சீல்' வைக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி அளித்தனர்.
தொடர்ந்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ஆலையில் உள்ள எந்திர தளவாடங்கள் துருப்பிடித்து இருப்பதால் பராமரிப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்படி தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்வதும், அது பின்னர் தோல்வியில் முடிவதுமாக இருந்தது. பொறுத்திருந்து பார்த்த வேதாந்தா நிறுவனம் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விற்பனை என்பது முதல் அமைச்சருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் ,வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை,என்றும் அதுதான் முதல் அமைச்சர் எடுத்திருக்கக் கூடிய நிலைபாடு என்றும் அதற்கு கிடைத்த வெற்றி தான் ஸ்டெர்லைட் ஆலை விற்பனை என கூறினார்.
மேலும், சுற்றுசூழலை பாதிக்காத வகையில் ,மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ள வேறு ஆலை அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.