ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பேட்டி
தூத்துக்குடியில் 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்துக்காக அமைதியான முறையில் மனு கொடுத்து வருகிறோம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பைச் சார்ந்த வக்கீல் முருகன், நான்சி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பு வக்கீல் ஜெயம் பெருமாள் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பலர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இருந்தும் வந்து உள்ளனர். ஆகையால் மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர். கிராம மக்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். இதுவரை 70 ஆயிரம் மனுக்கள் அளித்துள்ள போதிலும், போராட்டத்துக்காக மாணவர்களையோ, சிறு குழந்தைகளையோ அழைத்து வந்தது கிடையாது. மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடைய வருமானம் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை அரசு பின்பற்ற வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மூன்று விதமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி அளித்தால் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். எனவே இந்த வேலை கிடைப்பதை தடுக்கும் வகையில் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாங்கள், அமைதியான முறையில் மனு அளித்து வருகிறோம். சிலர் தூண்டுதலின் பேரில் தவறான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே போராட்டம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்துக்காக அமைதியான முறையில் போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்கள் போராட்டம் ஜெயிக்கும் என்று கூறினர்.