சாலையில் மீன்களை கொட்டி மற்றொரு தரப்பினர் மறியல்
நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தரப்பினர் சாலையில் மீன்களை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த ்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகூர்:
நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தரப்பினர் சாலையில் மீன்களை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த ்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீன்பிடி தடைக்காலம்
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கவும், கடலில் மீன் உற்பத்தியை பெருக்கவும் ஆண்டுதோறும் கிழக்கு கடல் பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.அப்போது நாகை, காரைக்கால் மாவட்டங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இழுவை படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இரு தரப்பினர் இடையே பிரச்சினை
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் நீங்கியதால் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல நாகை மாவட்ட மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இவ்வாறு பிடித்து வரப்பட்ட மீன்களை நாகை மாவட்டம் நாகூர் துறைமுகத்தில் வைத்து விற்பது ெதாடர்பாக மேலபட்டினச்சேரி, கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே நேற்று பிரச்சினை ஏற்பட்டது.
சாலையில் மீன்களை கொட்டி மறியல்
மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை இங்கு வைத்து விற்பனை செய்யக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், ஆத்திரம் அடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் நேற்று திடீரென நாகூரில் மெயின் ரோட்டில், தாங்கள் பிடித்து வந்த மீன்களை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதனைத்தொடர்ந்து மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகூர்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் மேலபட்டினச்சேரி மீனவர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மீன் வண்டிகளுடன் வந்தனர். அங்கு மீன் பெட்டிகளை தரையில் வைத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் மீனவர்கள் நீண்டநேரம் அங்கேயே காத்திருந்து விட்டு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.