போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து பெண் மறியல்
கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு நடுரோட்டில் அமர்ந்து போராடினார். தொடர்ந்து குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு நடுரோட்டில் அமர்ந்து போராடினார். தொடர்ந்து குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழிமறித்து தாக்குதல்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, கீழ் ஆலத்தூர் அடுத்த, நாகல் காலனியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 32), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவிகள் கலையரசி (30), சீதா (29). இவர்களின் உறவினர் மரியா (27). இவர்கள் குடும்பத்திற்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கலையரசன் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றபோது அந்த தரப்பினர் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கேட்க சென்ற கலையரசனின் மனைவி கலையரசி மற்றும் சீதா ஆகியோரையும் தாக்கி மிரட்டி உள்ளனர். ஏற்கனவே தாக்கியதாக 20-5-2022 அன்று கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று 1-6-2022 அன்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆனால் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று காலையில் சீதா என்பவர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் எதிரில் தன் மீதும், குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அங்கு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார். அப்போது ஏற்கனவே கலையரசனை தாக்கிய கும்பல், போலீசில் புகார் கொடுத்துவிட்டு சென்ற கலையரசனின் அக்காள் மீனா மற்றும் அவர் மகன்கள் கிஷோர், நவீன் ஆகியோரையும் வழிமறித்து தடியால் தாக்கினர். இதில் மீனா, கிஷோர், நவீன் ஆகியோர் பலத்த காயம் பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் கலையரசன் தரப்பினர் புகார் மனு கொடுத்துள்ளனர். கலையரசன் தரப்பைச் சேர்ந்த மரியா என்பவர் இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார்.