40 ஆயிரம் டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி இருப்பு


40 ஆயிரம் டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி இருப்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் கால்நடைகளுக்கு செலுத்துவதற்காக 40 ஆயிரம் டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

கருச்சிதைவு தடுப்பூசி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புருசெல்லோசிஸ் எனும் கருச்சிதைவு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு வகை தொற்று நோய் ஆகும். இந்நோய் அசைபோடும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் மற்றும் மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும். இது அசைபோடும் கால்நடைகளுக்கு ஏற்படும் போது, இறந்த நிலையில் கன்று பிறப்பது, நலிந்த கன்று, நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது மிகவும் குறைவு. ஒருமுறை இத்தடுப்பூசி போட்டுக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படும்.

தடுப்பூசி முகாம்

தற்போது தேனி மாவட்டத்தில் 4 மாதம் முதல் 8 மாதம் வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கருச்சிதைவு நோய் (புருசெல்லோசிஸ்) தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கான தடுப்பூசி முகாம்கள் வருகிற 28-ந்தேதி வரை கால்நடை மருத்துவமனைகளில் நடக்கிறது.

தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும். தேனி மாவட்டத்தில் 40,000 டோஸ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் 12,300 டோஸ்கள் போடப்படவுள்ளன. தேனி மாவட்ட கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களது கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசிகள் போட்டு அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story