போலீஸ்காரர்கள்போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி வழிப்பறி
மன்னார்குடியில் ேபாலீஸ்காரர்கள்போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மன்னார்குடியில் ேபாலீஸ்காரர்கள்போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியாக நடந்து சென்ற மூதாட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (வயது65). இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு சென்று இருந்த தனது பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 2 பேர், காந்திமதியிடம் தங்களை போலீஸ்காரர்கள் எனக்கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள், 'முதியவர்கள் கழுத்தில் தங்க நகை அணிந்து கொண்டு தனியாக செல்லக்கூடாது. வழிப்பறி நடக்கிறது. எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள், பாதுகாப்பாக பர்சில் வைத்து தருகிறோம்' என கூறி உள்ளனர்.
நூதன முறையில் திருட்டு
இதை உண்மை என நம்பிய காந்திமதி தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அந்த சங்கிலியை அவர்கள் 2 பேரும் காந்திமதியின் மணிபர்சில் வைப்பது போல் நடித்து, அதை நூதன முறையில் திருடிச்சென்றனர்.
இந்த நிலையில் காந்திமதி வீட்டுக்கு திரும்பி வந்து பர்சில் தங்க சங்கிலி இருக்கிறதா? என பார்த்தபோது அதை காணவில்லை. கூழாங்கல் மட்டுமே இருந்தது. 2 பேர் போலீஸ்காரர்கள்போல் நடித்து தன்னை ஏமாற்றி தங்க சங்கிலியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற 2 பேரையும் வலைவிசி தேடி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
இதனிடையே 2 பேர் காந்திமதியிடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடியது தொடர்பான காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.